பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 2026–2027ஆம் கல்வியாண்டிற்கான கல்லூரிகளுக்கு இடையிலான டென்னிஸ் போட்டி பெரம்பலூரில் உள்ள ஹான்ஸ் ரோவர் கல்லூரியில் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவுக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
இதில் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி (தன்னாட்சி) மாணவர்கள் ஆடவர் பிரிவில் பங்கேற்று சிறப்பாக விளையாடி முதலிடத்தைப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். அரையிறுதிப் போட்டியில் வலுவான அணியாகக் கருதப்பட்ட பிஷப் ஹீபர் கல்லூரி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அணி, இறுதிப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது.
இவ்வணியில் எஸ். தீபக் முதலாம் ஆண்டு முதுகலை மாணவர், ஏ.எஸ்.ஆர். திருமாறன் முதலாம் ஆண்டு இளங்கலை கணினி அறிவியல் மாணவர், ஆர். ராகுல் இரண்டாம் ஆண்டு முதுகலை கணிதவியல் மாணவர் ஆகிய மூவர் இடம்பெற்றிருந்தனர்.
மன்னர் சரபோஜி அரசு கல்லூரி சார்பில் டென்னிஸ் பிரிவில் முதன்முறையாக இச்சாம்பியன் பட்டம் வென்றிருப்பது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளது. மாணவர்களின் இந்தச் சாதனை கல்லூரியின் விளையாட்டுத் துறையின் வளர்ச்சியையும், மாணவர்களின் திறமையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இச்சாதனையைப் பாராட்டிய கல்லூரி முதல்வர் முனைவர் மு. சுமதி அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும், மாணவர்களை ஊக்குவித்து வழிநடத்திய உடற்கல்வித் துறை இயக்குநர் சந்தோஷ்குமார் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் விளையாட்டுக்குழு உறுப்பினர்கள் முனைவர் மங்களம், முனைவர் பாலாஜி, ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் அருணாச்சலம் உள்ளிட்ட பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு, டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


