தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி (தன்னாட்சி) போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம் சார்பில், “போதை வேண்டாம்! வாழ்க்கை வேண்டும்!” என்ற விழிப்புணர்வு முழக்கத்துடன் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நடைபெற்றது.
இப்பிரச்சாரத்தை கல்லூரி முதல்வர் முனைவர் மு. சுமதி அவர்கள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கல்லூரியின் போதைப்பொருள் எதிர்ப்பு மன்ற தன்னார்வலர்கள் கல்லூரியின் அனைத்து துறைகளிலும் பயிலும் மாணவ, மாணவியர்களை சந்தித்து, போதைப்பொருட்களால் ஏற்படும் உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள், கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களை நேரடியாகச் சந்தித்து, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். போதைப்பொருள் பயன்பாட்டைத் தவிர்ப்பது, இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாப்பது மற்றும் போதை இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் பங்கு குறித்து அவர்களிடம் கலந்துரையாடினர்.
“ஆரோக்கியமான வாழ்வு – போதை இல்லா எதிர்காலம்” என்ற கருத்தை வலியுறுத்திய தன்னார்வலர்கள், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதிலும், இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் போதைப்பொருள் எதிர்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளரும், வரலாற்றுத்துறைத் தலைவருமான முனைவர் நா. சேதுராமன் அவர்கள் செய்து, பிரச்சாரத்தை ஒருங்கிணைத்தார். போதைப்பொருள் எதிர்ப்பு மன்ற தன்னார்வலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் திரளாகப் பங்கேற்று விழிப்புணர்வு பிரச்சாரத்தை சிறப்பாக மேற்கொண்டனர்.
“போதை இல்லா தமிழகம் – ஆரோக்கியமான இளைஞர்கள் – வளமான எதிர்காலம்” என்ற இலக்கை முன்னிறுத்தி இப்பிரச்சாரம் நடைபெற்றது.



